அன்றாட வாழ்வில் நாம் கடந்துபோகும் சின்னச் சின்ன விஷயங்களை வித்தியாசமான அணுகுமுறையோடு ‘இப்படியும் பார்க்கலாம்’ என்னும் தலைப்பில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘வெற்றிக்கொடி’ இணைப்பிதழில் ஷங்கர்பாபு கட்டுரைகளாக எழுதினார். அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம். வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற தொடராக அது அமைந்தது. நூல் வடிவிலும் இந்தப் புத்தகத்துக்கு வாசகர்களின் வரவேற்பு நிச்சயம் இருக்கும்.
“கற்றது பைட் அளவு; கல்லாதது ‘ஜிபி’ அளவு” என்பது போன்ற சொல்லாடல்களோடு அமைந்த கட்டுரையின் உரைநடை இந்தக்கால இளைஞர்களையும் கவரும். ஆங்கிலத்தில் ‘லேட்டரல் தின்கிங்’ (Lateral Thinking) என்று அழைக்கப்படும் மாற்றுச் சிந்தனைதான் எல்லாக் கட்டுரைகளிலும் மைய்ய நீரோட்டமாக ஓடுகிறது. ஒவ்வொரு கட்டுரையையும் படித்துமுடிக்கும்போதும், ‘சரிதான்... இந்த விஷயத்தை நாம கவனிக்கவே இல்லையே’ என்னும் உணர்வு ஏற்படும்.
சில கட்டுரைகளில் உண்மை முகத்தில் அறைகிறது. சில கட்டுரைகளில் மயிலிறகால் வருடும் இதம் இருக்கிறது. சில கட்டுரைகளில், ‘மாற்றம் ஒரே நாளில் வருவதல்ல; ஆனால் மாற்றத்துக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்’ என்னும் தெளிவு இருக்கிறது. சில கட்டுரைகளில், ‘பிரச்சினைகளை இயல்பாக நாம் வரவேற்பதற்கு தயாராக வேண்டும்’ என்கிறார். சில கட்டுரைகளில், சகிப்புத்தன்மையையும் பொறுமையையும் நேர்மையையும் வலியுறுத்துகிறார்.